Friday, April 12, 2013

விடியலின் வெளிச்சம் எங்கே? - ஷைலஜா பெங்களூர்


கொலையும் கொள்ளையும்
நாட்டினிலே பெருகிப்போச்சு-இந்தக்
கோயில்கூட பலருக்கிங்கே
பாசறையாச்சு

தலைவன் திருடன் என்றிருந்த
பேதமும்போச்சு- அட
தலையை ஆட்டும் பொம்மைக்கிங்கே
ராஜ்ஜியம் ஆச்சு

தன்னலம்தான்  நாளும் இங்கே
பொதுநலமாச்சு-உயர்
பொன்னைவிட பதருக்குத்தான்
பெருமையும் ஆச்சு

துன்பம் உனக்கு இன்பம் எனக்கு
என்பதுமாச்சு-நமது
தேசத்தந்தை நினைவு இன்றோ
வெறுங் கனவாச்சு

பறங்கியரை நாம் விரட்டிப்
பல காலமும்ஆச்சு- உடன்
பண்பாடதுவும்  காற்றினிலே
பறந்தே போச்சு

இரவில்கிடைத்தசுதந்திரத்தை
இன்று புரிந்தவரில்லை-அன்று
வெள்ளையரை விரட்டியதும்
வெறும் கதையாச்சு!

நாறுமிந்த சமூகம் இன்று
நரகம் ஆச்சு- அதுவும்
நாலுகாசு உடையவனுக்கே
அடிமையென்றாச்சு.

ஆணவத்தின் பெயரும் அதி
காரம் என்றாச்சு  -பலர்
அடித்துக்கொண்டு அழிவதிங்கே
வாழ்க்கையும் ஆச்சு!

விடியல் வெளிச்சம் என்பதெல்லாம்
  வார்த்தையில்தானா-இளைஞர்
படை திரண்டு எழுந்துவிட்டால் துன்பம்
போயே போச்சு!

No comments:

Post a Comment