Friday, April 5, 2013

காதலாகி! - மலிக்கா



கருவேலமுள் கணுக்காலில்
நறுகென ஏறியதுபோல்
கண்ணீரை வரழைக்கும்!

கானக கடுவெயிலின் தாக்கத்தில்
தாகமெடுத்து தாகமெடுத்து
தொண்டை வரழும் தவிப்பை உண்டாக்கும்!

இதயதிற்கும் இரு உதட்டுக்குமிடையில்
இடைவிடாது இனம்புரியாத
இம்சைகள் இராப்பகலாய் தொடரும்!

நரம்புகளுக்கும் ரத்த நாளங்களுக்குமிடையில்
நாட்டியமாடும் நளினங்கள்
நையப்புடைத்து நச்சரிக்கும்!

ஊனை உருக்கி!உடலை கிறக்கும்!
கூட்டதின் நடுவே தனிமை சிறைப்படுத்தும்!
மெளனசங்கிலிகொண்டு பிணைக் கைதியாக்கும்!

காத்திருந்து காத்திருந்து கண்கள் சிவப்பாகும்!
பார்த்திருந்து எதிர்பார்த்திருந்து மனமும் சோர்வாகும்!
வேர்த்திருந்து குளிர்த்திருந்து உடலும் சீக்காகும்!

உயிர்வதை உடல்வதை இருவதை!
உயிர்வலி உடல்வலி இருவலி!
இருவகையானதை ஒருவகையாக்கும்!

உணர்வுகள் உணர்ச்சிகள்
இரண்டுக்கும் சிறு இடைவெளி!
இரண்டுக்கிமிடையில் சிக்கித்தவிக்குமே காதலாகி!


No comments:

Post a Comment