Thursday, April 11, 2013
உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - Ramkishore
(மரபுக் கவிதை - இன்னிசை வெண்பா இலக்கணம்)
விதையாய் உதிரமிட்டு வேர்வை அதைத்தெளித்து
ஊனை உரமாக்கி மூச்சைப் பயிராக்கித்
தன்னை உணவாக்கி நம்மை வளமாக்கும்
உண்மை உழவனைப் பார்.
பருவம் தடுமாறி மாரி அதும்மாறி
நீரும் நிறம்மாறி ஆறும் உருமாறி
பச்சை வயல்மாறி காய்ந்த நிறமாக
அச்சம் பிணைத்தவனைப் பார்
இரசாயனம் நம்பி விவசாயம் கெட்டு
விசாலமும் இன்றி வயல்கள் அருகி
விளைச்சலும் பொய்க்க உழவர் உள்ளம்
உளைச்சலில் தேய்வதைப் பார்
இளைஞர் படைதிரண்டு கட்டை உடைத்தெறிந்து
காணி களங்கண்டு நாட்டை வளமாக்கின்
இன்னுயிரை ஈவாக்கும் துன்பக் கணக்கினை
காற்றில் கரைத்திட லாம்.
மென்பொருள் யாதுமே உண்பொருள் தாராது
ஒண்பொருள் என்றுமே மண்பொருள் கிண்டிடும்
வேளாண்மை ஒன்றுதான் என்றுணர்ந்து நீயும்
வேளாண்மை கற்றதைப் பேணு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment