(மரபுக் கவிதை - இன்னிசை வெண்பா இலக்கணம்)
கரியமிலக் காலனும் மேலே அழுத்த
எரியா நெகிழியோ கீழே அழுத்த
மரிக்கும் நிலையில் நடுவே நசுங்கி
நிலமகள் நோவது ஏன்?
நச்சுக் கரும்புகை மஞ்சளாய்ப் பூசியே
பச்சை நிலமெனும் கச்சமும் நீங்கியே
பிச்சைக்குக் கெஞ்சிடும் வஞ்சியாய் இன்று
நிலமகள் நோவது ஏன்?
எண்ணெய் இலாத பரட்டை மயிர்போலே
தண்ணீர் இலாமல் நதிகளும் ஓடிட
தண்மை இழந்து வளங்கள் குறைந்து
நிலமகள் நோவது ஏன்?
விலைமகளாய் எண்ணி விலைக்கு விடாது
நிலமகளின் பண்பை நமதுயிராய்ப் பேண
தலைமகளாய் ஒண்மை ஒளிர்ந்திட என்றும்
நிலமகள் மாண்புறுவாள் காண்
No comments:
Post a Comment