Thursday, April 11, 2013

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் - umapalan

சேற்றிடை யிட்ட நாற்றுகள் கூட
  ஆற்றிடும் நல்ல அறுவடை யென்கில்
ஆறறி வென்றோர் அருட்கொடை பெற்றும்
  நாறிடில் நம்பர் நகைப்பிட மன்றோ?

இன்பம் துன்பம் எதுவென் றாலும்
  ஈனம் காட்டும் இவர்தம் சாட்டு
அன்பைக் கொண்டார் அன்பைக் கொன்றே
  ஆளும் சாவார் ஆளும் சாபம்!

மாதைப் பிரிந்த வாதை போகப்
  போதை ஏற்றும் பேதை ஆக
மாதால் மதுவைப் பிரிவதும், பின்னர்
  மதுவால் மாதைப் பிரிவதும் நாளும்

இவர்களுக் கிங்கே சாதாரண மானது
  இவர்தவறுக் கெல்லாம் சாகாரண மானது!
மது குடிக்கும் மனிதன் உயிர்
  மது குடிக்கும் எனத் தெரிந்தும்

போதைச் சேற்றில் புத்தி புதைய
  பாதை தெரியாப் பயணிகள் தாமாய்
நின்றுளர் பேர்கள் நன்றுளர் என்பர்
  ஒன்றுள ராந்தமிழர் என்றுளர் போன்றே!

No comments:

Post a Comment