நேரிசை ஆசிரியப்பா
முகிலிடை மூடப் புகுமிடந் தேடி
முகிழிள நிலவாய் முன்னெழி லொதிக்கி
முகங்காட்டு மெந்தன் முன்தவப் பெண்ணாள்
அகம்வாட்டு கின்றாள் அனலூட்டு கின்றாள்!
தாமரைக் குளத்துத் தண்ணீ ரதுதான்
தாமதுள் ஈர்க்கும் தடமாஞ் சுழிபோல்
கன்னத் திரண்டு கள்ளக் குழியின்
வன்னங் கண்டார் வாய்மொழி யிழந்தார்!
மலைமேல் பட்ட மேகம் மழையாய்ப்பின்
மலையிடை காட்டும் மணிமுத் தாறாய்!
நட்டு நிறுத்திய நெடுமலை யிரண்டிடை
தொட்டுத் தவழும் தெளிதண் ணதிபோல்
மங்கை தானணி மஞ்சள் தாவணி
கொங்கை தழுவிக் கோடி காட்டும்!
தண்டமிழ் பாடுந் தண்டலைக் குயிலாள்!
வண்டுகள் நீந்தும் வாள்விழிக் கண்ணாள்!
பட்டுத் துகிலுடல் பட்டும் மேனிக்
கட்டுக் காட்டும் கலையா தழகாள்!
கடைக்கண் ணுமிழ்காதற் குறிப்பால்
படைக்கின் றேன்யானும் பலகவி யதனாலே!
umapalan@gmail.com
No comments:
Post a Comment