Wednesday, April 10, 2013

காதலைத் தீண்டும் சாதி நாகம் - ஷைலஜா பெங்களூர்

அன்பு என்பதன் நீட்சியாய்
பாசம் என்பதின் பரிணாமமாய்
காதல் வருகிறது

கற்பாறைகளுக்கு
உள்ளிருக்கும்
கற்சிலைகள்
செதுக்காமலே தெரிவது
காதலில்தான்

ஒன்றிய மனங்களில்
உருவாகும் காதலை
கருக்கும் சாதி தடையாகும்
சாதியில்லா சாதி உண்டா
மணக்கின்ற மல்லிகையைக்கூட
மனிதன்
இதன் பட்டியலில் சேர்த்துவிட்டான்

கலவரத்தால் மட்டுமல்ல
காதலினாலும் சாதி
விழுங்கிய உயிர்கள்  ஏராளம்
சாதியை வெல்ல நினைத்து
தோல்வியுற்ற இளம்ஜோடிகள்
சாதி நாகம்  தீண்டியதால்
தூக்குக்கயிறுகளையும்
ரயில்தண்டவாளங்களையும்
முத்தமிட்டனர்.

அன்பறியா அற்பர்களால்
உருவாக்கப்பட்டு
கண்டபடி விடம் தலைக்கேறி
காதலர்களை அடிக்கடித்
தீண்டிக்கொண்டுதான் இருக்கிறது
சாதி நாகம்!

No comments:

Post a Comment