Friday, April 5, 2013

தாகம் தீர்க்காத நதிகள் - நாகசுந்தரம்


பத்துமாதம் வயிற்றினிலே சுமந்து நின்று -
    பெத்தவனை பார்த்துபார்த்து வளர்த்த பின்பு -
புத்திதனை தந்திடவே பாடம் சொல்லி
    பக்கம்வைத்து எக்காலம் போற்றிக்காத்து
எத்திக்கும் தேடிதுணை தன்னைத் தந்து
    ஏற்றமுடன் வாழவைத்து நிற்கையிலே
இத்தனைநாள் வளர்த்தவரை இல்லம் நீக்கின்
    தாகத்தை தீர்க்காத நதிகள்தானே !

காசுக்கே வாழுகின்ற மனிதர் இங்கே
    கழிவுகளை கொட்டுகின்றார் நதிகள் தன்னில்
வாசனை திரவியத்தை உடம்பில் போட்டு
    வீசுகின்றார் வீண்பொருளை ஓடும் நதியில்
கூசுதப்பா இவர்கொள்கை தன்னை கண்டு
    கொட்டுகின்றார் குப்பைகளை காக்கும் நதியில்
ஏசுமப்பா இவ்வுலகம் நம்மை ஒருநாள்
    ஏதுமில்லை தாகத்தை தீர்க்கும் நதிகள் (என)

தாகத்தை தீர்க்காத நதிகளாலே
    சகத்தினிலே சிறிதேனும் பயனுமுண்டோ ?
சோகத்தை தீர்க்காத சொந்தம்போலே
    சுற்றிசுற்றி வருவதனால் பயனுமுண்டோ ?
நோகும்படி பேசுகின்ற மனிதர்போலே
    நானிலத்தில் நதியாலே பயனுமுண்டோ ?
பாகும்பருப்பும் படைத்து நின்றோம்
    புகலிடம்நீதானே போகும் நதியே
பாக்களினால் வேண்டுகின்றோம் பொறுமையாக
    தாகத்தை தீர்த்துவிடு தயவுடனே.

No comments:

Post a Comment