Wednesday, April 10, 2013
கமண்டலத்தில் காவிரி - Dr. சுந்தரராஜ் தயாளன்
நன்று ......
ஆறுகள் பலவுண்டு தமிழகத்தில்,
ஆயினும் உமக்கு நிகராகக்
கூறிடுமாறு வேறாறுக ளேதுமில்லை,
குடகினில் உதித்தநல் நங்கையே
மாறுதலாக வந்தயெம் மருமகள்நீ,
மக்கள் சோர்வுறும் வேலைதன்னில்
ஆறுதல் சொல்லும் தாயாகி
அமைதியாய்ப் படர்ந்தாய் நீவாழி
அன்று ......
காவிரித்தாய்க் கரைமருங்கில், கவின்விரித்தாய்,
கழனியிலே கன்னலொடு கார்செந்நெற்ப்
பூவிரித்தாய், புனல்விரித்தாய், பைந்தமிழ்ப்
பாவலர் நெஞ்சி லுனையென்றும்
பாவிரித்தாய், புகழ்விரித்தாய், பல்லோடைகள்
பால்சேர்ந்தே பலமாகிப் பாவித்தாய்,
நீவிரித்தாய் நீர்வளத்தை, எங்களுள்ளில்
நீங்காத தெய்வமாய் நீநிலைத்தாய்
இன்று ......
துள்ளிப் பறக்கும் புள்ளினத்தைத்
துரத்திப் பிடித்தே அடைப்பதுபோல்,
பள்ளியில் பயிலும் பாலகனைப்
படிக்க விடாமல் தடுப்பதுபோல்,
கள்வர் உனையே களவுசெய்தார்,
கட்டி யடைத்தார், கற்பழித்தார்,
வெள்ளை மணலையும் விடவில்லையே,
வெற்றுச் சாக்கடை யாக்கிவிட்டார்
என்றும் ......
நோயின்றி நாம்வாழ முடியும், சாவு
நோக்காட்டை வேரறுக்க முடியும், பிள்ளை
தாயின்றித் தான்வாழ முடியும், தங்கம்
தானின்றிப் பெண்வாழ முடியும், ஆனால்
காயின்றிக் கனிவருவ துண்டோ? நெஞ்சில்
கருத்தின்றிக் கவிவருமோ? அதுபோல் தாயே
நீயின்றித் தமிழ்நாடே இல்லை, இந்த
நிலவுலகில் எங்களுக்கோ நீங்காதே தொல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment