Thursday, April 11, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு - ஷைலஜா பெங்களூர்


வயல் வெளி அல்ல  இது
எங்கள்
வாழ்க்கை வழி.
பச்சைசேலையை
 வயல்மங்கை
 உடுத்தும்போது
பசுமை இங்கு மட்டுமல்ல
பாரதநாட்டிற்கே தான்!

பொன்னைச்சிறுமணியாக்கி
கோர்த்து வைத்தாற்போன்ற
நெற்கதிர்கள்
அவை நெற்குவியல்கள் அல்ல
பொற்குவியல்கள்!

ஆறுமாதக்கால
அயராத உழைப்புக்கு
உழவனுக்குக்கிடைக்கும்
உன்னதப்பரிசு!
வான வள்ளல்தரும்
மழைமுத்தம் பெற்று
பூமகள் கர்ப்பம் அடைந்து
நெல்மணிகளை
நன்கு ஈன்றெடுப்பாள்.
வகைப்படுத்திய மணிகளை
வண்டியில் ஏற்றியபிறகு
வயிற்றுப்பாட்டிற்கு
வஞ்சர்மீனோடு
பழைய சோறு உண்போம்
என்றெல்லாம்  போட்டிக்குக்
கவிதை எழுதிப்பொற்கிழி
பெற மனமில்லை

வானம்  பொய்த்தது
மழை நின்றது
பூமி வறள்கிறது
வயல்வெளிகள் இன்று
வெறும் வெளிகள்

பழைய சோற்றுப்பானை
பச்சைத்தண்ணீரோடு மட்டும்
பாரத நாட்டில் நாங்கள்
உழுதுண்டு வாழ வகையின்றி
தொழுதுண்டு  உங்கள்பின்
செல்ல அறியோம்
ஆதலினால்
துறக்கின்றோம்

உயிரை!

No comments:

Post a Comment