ஈழம் மீளும்
மெல்லப் பறந்ததொரு மேகம், அது மின்னச் சடசடக்கும் இடியும்
சொல்லக் கொட்டும் மழைபோலும், அது தூவும் குண்டு மழையாகும்
வில்லை வளைத்த வண்ண வாழ்வாய், அன்று வெல்லும் நிலையிருந்த காலம்
எல்லை கடந்த துன்பமாயும், இன்று ஏனோ மாறியது வாழ்வும்
கல்லைச் சேர்த்திறுக்கிக் கட்டி, உடல் கொல்லக் கடலினிடை போடும்
பொல்லாச் செயலை யொத்த தாயும், இனம் கொல்ல உலகும் ஒத்து ஊதும்
அல்லோர் செயலை விதி கூறும், அதை ஆக்கி மகிழ்வர் பகையாகும்
புல்லர் தனை கரமும் கூடும், புவி புகழ்ந்து பெரிதெனவே பேசும்
நல்லோர் வாழ விதியில்லை, இந்த நாளில் சுடும் வெயிலும் எம்மை
கொல்லும் எவர்க்கும் குற்றமில்லை, இதைக் கூடிஎழுதிவைத்தசொல்லே
வல்ல இனம் உலகில் வாழும், இது வகுத்தவிதி இயற்கை உண்மை
வில்லை வளைத்து எய்து வென்றோம், இன்று வெற்றுக்கர மெதுவு மில்லை
இல்லை மகிழ்வு என்பமாறி, இவர் என்றும் மனி்தரென வாழும்
நல்லோர்நிலை திரும்பவேண்டும், இது நாளும் வணங்கும் எங்கள் தெய்வம்
கல்லை நிகர்த்த மனம்விட்டே, விழி காணத் திறந்தருள வேண்டும்
எல்லையற்ற இந்த உலகில், இது ஒன்றே நிகழின் ஈழம் மீளும்!
அன்புடன் கிரிகாசன்
No comments:
Post a Comment