Thursday, April 4, 2013

விடியலின் வெளிச்சம் எங்கே - சுந்தரம்ராஜேந்திரன்



தவம் பல இயற்றி
   இந்தியத் தாய்
கருவுயிர்த்த சிசு!
      பண்பாடு !

இது பகுத்தறிவு ஞானிகள்
   ஞானம் செப்பும் குடில்!
பாடறிந்து ஒழுகும்
   பண்பட்ட இதயங்களின்
   புண்ணிய பூமி !

குருதியை
   உழைப்பில் ஓடவிட்டி
   உப்பு நீர் வியர்வையை
   உணவில் கலந்துண்பவர்கள்!

குறள் கருத்தின் பாத நிழலில் வாழும்
     வானைப்பார்த்து ஓளிரும்
     கோபுரக் கலசங்கள்!
இன்று இந்தியப் பண்பாடு !
     புண்பட்டு ஊனப்பட்ட தெருச்சிலை!

கறையான் வாய்பட்டு
    உயிருக்குப் போராடும்
    ஓலைச் சுவடிகள்!

நாகரீகத்தின் அதிகாரக்
    கருவறையில்
    கொலையாகும்
    உயிர் சிசுக்கள்!

நாளும் பஞ்சமா பாதகங்கள்
    அலங்காரமாக
    அரங்கேறும்
    அவலப் பகற்பொழுதுகள்!

குணங்களை தெருக்களில் விற்று
     பணங்களை வீட்டில்
     எண்ணும் ஆசை மனங்கள்!

புதைகுழிக்குள்
    வாழ்க்கையை புதைத்து விட்டு
    வசந்தத்தின்
    வாசல் தேடி!
    அலையும் அவசர மனிதர்கள்!

மனிதம் தொலைத்த
     மனங்களைச் சுமக்கும்
     மனித எந்திரங்கள்!

 இன்று நாகரீகத்தின் கரங்கள்
   ஆதிமனிதனின்
   அநாகரிக ஏடுகளின்
   பக்கங்களைப் புரட்டிக்
   கொணடிருக்கிறது!

இருளைத் தூர்க்கும்
        கதிக் கரங்களும்
        பண்பாட்டுப் புதைக்குள்
        கருப்பு முகமானது!

விடியலின் பிரசவம் தானே!
        வெளிச்சக் குழந்தை !
விடியலின் குழந்தை
  விடியா இரவுக் கருவறையில்
  புதைந்து கருவிலே
   கரைந்து போனது

இனி ……..
நாகரீக முள்தோலை
    உரித்தால் தான்
    பறந்து போன
    பண்பாட்டுச் சுளைகளைச்
    சுவைக்க முடியும்!!

No comments:

Post a Comment