Wednesday, April 3, 2013

ஆனாலும் காதலிக்கிறேன் - ரமேஷ்நாகா


தேவதை ஒன்று....
முத்தமிட்டுத் தந்த சொற்களைக் கொண்டுதான்
உனக்கான கவிதையை எழுதியிருந்தேன்.

வெப்பம் ததும்பும்...தார்ச்சாலையில்
தளும்பி விலகும் கானல் நீரென
நீ பிடிபடாமல் செல்கிறாய் என் சொற்களுக்கு.

இரவின் புனைவுகளில் விரியும் உன் பிம்பம்...
எப்பொழுதும் நீர் கசியும் கண்களால் நிறைக்கிறது என்னை.
சலனங்கள் தேங்கிய மனது...என் பிரியத்தைச் சாறெனப் பிழிந்துதர..

நீ விலக்கி வைத்த குவளையில்...சலனமற்றிருந்தது என் பிரியம்.
இருளின் நிழலில்...கண்களில் ததும்பும் நீரைவிலக்கியபடி...
எனக்குள் வளைந்து நெளியும் சிலிர்ப்புக்களுள் உறைந்தபடி...

வெகு பிரியத்துடன் சொல்கிறேன்..உன் மீதான காதலின் சொற்களை.
இன்றும்...நீ விரும்பாத கவிதைகளுடன் நான்.
மாற்றான் பார்த்து மருளும் மழலையாய்..விலகும் பாதையில் நீ.

என்றாலும்...நாளை என் இறுதிக் கணத்திலும் சொல்லுவேன்..
இந்தப் பிரியத்துடன்..”ஆனாலும் காதலிக்கிறேன்”.

No comments:

Post a Comment