காதலெனும் சாவினிலே
மாலையிளங் காற்றணைந்து மேனிதொட நாணுகிறேன்
மன்னவனே ஏன் பிரிந்தாயோ
சோலைமலர் வாசமெழச் சேதி வரும் காலையெனச்
சிந்தைபகை கொள்ள நின்றாயோ
பாலைவன மாயுடலும் பால்நிலவில் தீயெழுந்து
பாவையெனில் தீங்கு செய்வதேன்
ஓலைபல நானெழுதி உத்தமரே தந்துமென்ன
ஊமை விழியாகி நிற்பதேன்
காலைஅலர் பூநிதமும் காண வண்டை ஏங்கியழும்
காற்றும்துணை தேடிஓடிடும்
மாலை நிலா தன்துணையை மௌனமுடன் தேடிவரும்
மாற்றமில்லை தேய்ந்துபோவதும்
மேலைக்கடல் நீர்த்திரைகள் மேனிசுருண் டோடிவரும்
மீண்டும் விழும் காண ஏங்கிடும்
தோலை எழில் பட்டிதமும் சுட்டெரிக்கும் நீபிரிந்தால்
தேவியெனைச் சா அணைத்திடும்
சோலைதனில் பூமலர்ந்து சொட்டுமிதழ் தேனருந்தச்
சுந்தரனே வந்துவிடாயோ
சேலையிலே சுற்றுமுடல் தீஎரியத் தோன்றுவதேன்
காதலெனும் சாவிதுதானோ?
No comments:
Post a Comment