Wednesday, April 3, 2013

விடியலின் வெளிச்சம் எங்கே? - தஞ்சாவூரான்


போர்க்களத்தின் புழுதிக்காற்றில்
சுவாசம் திணறி செத்துவிழும்
சமாதானப் புறாக்கள்

துக்கத்தின் முகத்தை
நோக்கத் துணிவில்லாமல்
தூக்கத்தில் முகம் புதைக்கும்
தொட்டாச்சிணுங்கிகள்!

மலர்ந்தும், மணத்தை
மறந்தும், வீசாமல்
மீண்டும்...
மொட்டாய் இதழ்சுருக்கி
புலம்பும் பூக்கள்!

இவர்கள்
கண்ணீர் துளிகளின் கனத்த வெப்பத்தில்
பனிப்பாறைகளே பற்றி எரிகின்றன!

இங்கே
தர்பாரி ராகங்கள் தவிர்க்கப்பட்டு
முகாரிகளுக்கே முன்னுரிமை தரப்படுகிறது

தொலைந்த வாழ்க்கையை
காற்றில் தேடும் கைகள்
விடியலை நோக்கி
விரையும் கால்கள்

விடியலின் வெளிச்சம் எங்கே?
விடிந்தாலும்
அதைக்காண துடித்த
விழிதான் எங்கே?!

No comments:

Post a Comment